tamilnadu

img

விவசாயிகளுக்கான திட்டத்தில் கூட்டு மோசடி...

“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் அய்யோன்னு போவான்”  என்று பாரதியார் சாபமிட்டார். பாரதியார் காலத்தில் ஒரு வேளை சூது வாது செய்தவர்களில் ஒரு பகுதியினர் திருந்தியிருக்கவும் கூடும். 

ஆனால் தற்போது இதைப்பற்றி கடுகளவும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதனால் தான் அச்சமின்றி ஊழல், மோசடி, ஏமாற்று, பொதுப்பணத்தை சூறையாடுதல் போன்ற காரியங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. அதிகார வர்க்கத்தில் மேலிருந்து கீழ் அனைவரும் இத்தகைய நடவடிக்கையில் கூச்ச நாச்சமின்றி ஈடுபடுகின்றனர். அத்தி பூத்தது போல் அங்கொன்றும் - இங்கொன்றுமாக சிலர் விதிவிலக்காக இருக்கலாம். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் தமிழ்நாட்டில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் மோசடி, ஊழல், முறைகேடு என்பதெல்லாம் எல்லையற்ற ஒன்றாக நடந்து கொண்டுள்ளது. எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதில் ஆளுங்கட்சிக்கும் - அதிகாரிகளுக்கும் எவ்வளவு கிடைக்கும்என்ற கருத்து தளத்திலேயே சிந்தித்து செயல்படுத்தப்படு கிறது என்பது தமிழகம் அறிந்த ஒன்று. அதிமுக ஆட்சியில் ஊழல் என்பது புதிய செய்தி அல்ல. ஆனால் இப்போதுநடந்திருப்பது நூறு சதவீதம் மத்திய அரசின் நிதியில்அமல்படுத்தப்படும் திட்டம். அதில்தான் வேளாண்மை துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், பி.ஜே.பி., அதிமுகவை சார்ந்த அரசியல் பிரமுகர்கள், தனியார் இணைய மையத்தை நடத்துபவர்கள் என்று அனைவரும் கூட்டுச் சேர்ந்து இந்த மோசடியை செய்துள்ளனர். மோசடி நடைபெற்றுள்ளதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் தான் அதிகாரிகள் மட்டத்திலான விசாரணைக்கு உத்தரவிட்டது.

வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கல்லவாம்
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது வேளாண் சமூகத்திற்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் மோடி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. முக்கியமாக, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில்  விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதம் உயர்த்தி விலை தீர்மானிக்கப்படும். விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் தற்கொலைக்கு முடிவு கட்டப்படும். கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். இதில் ஒன்றை கூட நிறைவேற்றாதது மட்டுமல்ல, ஓட்டுவாங்குவதற்காக சொல்லப்பட்டதே தவிர நிறைவேற்றுவதற்காக அல்ல என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்றுணர்ந்த விவசாயிகள் நாடு முழுவதும் பிரம்மாண்டமான போராட்டங்களில் ஈடுபட்டனர். காவல்துறை அடக்குமுறை, தடியடி, துப்பாக்கிச்சூடு என அனைத்தையும் மீறி விவசாயிகள் ஒன்றுபட்ட தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். விவசாயிகளின் விரோதி மோடி என்பது விவசாயிகளின் உள்ளங்களில் ஆழப்பதிந்து போனது. நாட்டில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகள் மோடி அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளதை மாற்ற கொண்டுவரப்பட்டதுதான் இந்த திட்டம்.

“சிறு -குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ஆறாயிரம்ரூபாய் மூன்று தவணைகளாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்” இந்த திட்டம் 1.12.2018 முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தை அறிவித்த போது 14 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் என்று பிரதமர் அறிவித்தார். 2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நாடுமுழுவதும் தீவிரமாக நடைபெற்ற நேரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு அரசுப் பணம் அனுப்பப்பட்டது. அதாவது அரசு கஜானாவிலிருந்து ஓட்டுக்கு பணம் கொடுத்ததை மிகத்தந்திரமாக மேற்கொண்டார் மோடி. இதன் விளைவாக அந்த தேர்தலில் அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.

மோடி அரசில் விவசாயிகளுக்கு நேரடியாக சென்று சேரும் ஒரே ஒரு உதவி இந்த திட்டம் மட்டும் தான். அதில்தான் பல்வேறு மாநிலங்களில் மோசடி நடைபெற்றுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில்,  புகுந்து விளையாடி இருக்கிறார்கள். இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியற்ற பொதுமக்களிடம் இத்திட்டத்தில் சேர்த்து விடுகிறோம் என்று கூறி 1500, 2000 ரூபாய் என ஒவ்வொருவரிடமும் பெற்றுக் கொண்டு பெயரை சேர்த்துள்ளனர். போலியான வங்கிக் கணக்குகளை துவக்கி மோசடிப் பேர்வழிகளே நேரடியாக பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டிருக்கிறார்களா என்பது உட்பட விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.மத்திய அரசின் திட்டத்தில் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்ற பிறகும் தங்கள் அரசின் திட்டத்தில் மோசடியா என்று கொதித்தெழுந்திருக்க வேண்டிய பிஜேபி இது குறித்து வாயையே திறக்காமல் மௌனமாக இருப்பதை பார்த்தால் பல பிஜேபி பிரமுகர்கள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. 

விதவிதமான மோசடிகள்

1.    நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகள் பட்டியலைக் கொண்டு இந்த திட்டத்தில் அனைவரையும்சேர்த்துள்ளது.

2.    மாணவர்களின் வங்கிக் கணக்கை பெற்று இத்திட்டத்தில் சேர்த்துள்ளது.

3.    ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு எண் மட்டும் பெற்றுக் கொண்டு சேர்த்திருப்பது.

4.    ஒரு மாவட்டத்தில் உள்ளவர்களை வேறொரு மாவட்ட வங்கிக்கணக்கில் சேர்ப்பது.

5.    போலியான பட்டியலை தயாரித்து பயனாளிகள் என்று ஒருவர் இல்லாமலேயே சேர்த்திருப்பது என பலவித வடிவங்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. 

இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரியான இணை இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டு இல்லாமல் லிங்கை திறக்கவே முடியாது. எனவே, வேளாண்மை துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தான் இந்த மோசடி நடைபெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இப்படி உயரதிகாரிகள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட இந்த மோசடி குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே விசாரணை நடத்துவார்கள் என்று ஆகஸ்ட்-13 அன்று வேளாண்மை துறை அமைச்சர்  அறிவித்தார். இந்த விசாரணை கண்துடைப்பு நாடகம் என்பது வெள்ளிடைமலை. மோசடியில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் அதே நேரத்தில் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை தணிக்கும் வகையிலும் இப்படி பெயரளவிலான ஒரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.

தனியார் இணைய மையங்கள் 
இந்த மோசடியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஏற்காமல் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியது. பல மாவட்டங்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதில் பலதுறை சார்ந்த பல்வேறு மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். தனியார் இணைய மையங்கள், புரோக்கர்கள் என்று பலநூறு பேர் சம்பந்தப்பட்ட கிரிமினல் குற்றம் ஆகும். எனவே இந்த குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். மோசடி பணம் திரும்பப் பெறப்பட வேண்டும். முறையான தகுதிவாய்ந்த விவசாயிகள் அனைவருக்கும் இத்திட்டத்தின் பலன் போய்ச்சேர வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். அதே சமயம் மோசடி நடைபெற்றுள்ளமாவட்டங்களில் திட்ட செயல்பாட்டை நிறுத்திவைப்பது என்றுஅரசு அறிவித்துள்ளது. இதனால் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படுவர் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தனியார் இணைய மையங்கள் மூலம் பயனாளிகள் சேர்ப்பு என்ற நிலை உருவான பிறகு தான் லட்சக்கணக்கில் மோசடியாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் அல்லது இந்தாண்டு மார்ச் வரை சேர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலும் மோசடி நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை கவனத்தில் கொண்டு மொத்தமாக நிறுத்தி வைப்பது என்ற முடிவில் மாற்றம் செய்வது அவசியம். 

செப்டம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம், முதலமைச்சர், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்தது என பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகு செப்டம்பர் 2ஆம் தேதி 13 மாவட்டங்களில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. அதே சமயம் விசாரணையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். இந்த விசாரணையை அரசியல் தலையீடின்றி நடைபெறுவதும், விசாரணை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படு வதும் அவசியம். அதனால் விழிப்புடன் இருப்போம். 

திட்டத்தை விரிவுபடுத்துக!
திட்டத்தின் விதிகளை மீறி தகுதியற்றவர்களை பயனாளிகளாக சேர்த்தது என்பது அதிகாரிகளின் தவறு என்பதில் சந்தேகமில்லை. அரசாங்கப்பணம் அதிகாரிகளே தர தயாராக இருக்கும் போது பொதுமக்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை. இரண்டாவது ஏழைகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காத போது இப்படி ஒரு வழி இருக்கிறது என்றவுடன் பலரும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே இதில் பொது மக்கள் மீது குற்றம் சுமத்துவதில் பெரிதாக பலன் இருக்கப் போவதில்லை. அதே நேரத்தில், இத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். குறிப்பாக சிறு-குறுவிவசாயிகளாக உள்ள கோடிக்கணக்கான குத்தகை விவசாயிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது என்பது நியாயமல்ல. அதே போல் ஆறாயிரம் என்பதை ஆண்டுக்கு பன்னிரெண்டாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தகுதிவாய்ந்த பயனாளிகள் இத்திட்டத்தில் சேர முடியாமல் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. குறுக்கு வழியில் வாழ்வு தேடும் மனிதர்கள் சுலபமாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு பலனடைகிறார்கள் என்ற நிலைக்கு முடிவு கட்டப்பட வேண்டுமென்பதே விவசாயிகளின் கோரிக்கை.

கட்டுரையாளர் : பெ.சண்முகம்  - பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

;